Monday, 6 February 2017

சித்தர்காடு - சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதி

ழமையான ஆலயங்களில் சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி அமைந்திருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில்  அழகர்மலையில் ராமதேவர், திருவனந்தபுரத்தில் கும்பமுனி, திருவண்ணாமலையில் இடைக்காடர், விருத்தாசலத்தில் பாம்பாட்டிச் சித்தர், மயிலாடுதுறையில் குதம்பைச் சித்தர், திருவாரூரில் கமலமுனி, வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி, பழனியில் போகர்,  திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி, திருப்பதியில் கொங்கணவர், ராமேஸ்வரத்தில் பதஞ்சலி, காசியில் நந்தி, ஸ்ரீரங்கத்தில் சடையமுனி  என ஒவ்வொரு தலத்திலும், ஒவ்வொரு மகான்கள் குடியிருக்கின்றனர்.

ஆனால், சித்தர் ஒருவர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலமாக விளங்குவது, மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயமாகும். இந்த அபூர்வ ஆலயத்தினை அறியும் முன்பாக அதன் நாயகரும், குருவுமான சீகாழி சிற்றம்பலநாடிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தோற்றம்

சோழ வளநாட்டில் அமைந்துள்ள சீர்காழியில், சைவ வேளாண் குடியில் தோன்றியவர் காழி சிற்றம்பல நாடிகள். இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு ஆகும். சிற்றம்பல நாடிகள், திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைப் போற்றி வழிபட்டு, அருந்தவம் புரிந்தார். செந்தில் ஆண்டவனும் இவரது தவத்திற்கு இரங்கி, திருவருள் புரிந்து மெய்ஞானம் அளித்து அருளினார். 

சிற்றம்பல நாடிகள் முருகனின் திருவருளைப் பெற்ற பின்பு, மயிலாடுதுறையில் மடாலயம் ஒன்றை அமைத்து அங்கேயே தங்கி  தவமியற்றி வந்தார். தருமபுரம் ஆதீனத்து குருமுதல்வர் திருஞானசம்பந்தர் குருபரம்பரை முன்னோடிகளில், முதன்மையானவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக  அறுபத்துமூன்று பேர் இருந்தனர். 

கசக்கும் நெய்

ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்தார். அவர்களுக்கு அன்னமும், பருப்பும் பரிமாறப்பட்டன. பரிமாறுபவர் தவறுதலாக நெய்க்குப் பதிலாக வேப்ப எண்ணெயை எடுத்துப் பரிமாறினார். சிற்றம்பலநாடிகளும் அவரது சீடர்களும் எந்தவித வேறுபாடுமின்றி உணவருந்தினர். ஆனால், கண்ணப்பர் என்ற ஒரு சீடர் மட்டும், அதன்  கசப்புத் தன்மையை உணர்ந்தார். உடனே அதனை வெளிப்படுத்தவும் செய்தார்.

இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள், ‘நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும்’ என்று கூறினார். 

உடனே தனது தவறை உணர்ந்த அந்தச் சீடர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். தனது குருநாதருடைய திருவடியை   தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி வாழ்ந்து வந்தார்.  

சமாதி அடைய விருப்பம்

இந்நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். தனது சீடர்களிடம் தமது விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழமன்னனை அழைத்து, அம்மன்னனிடம்,  ‘யாம் திருக் கூட்டத்தோடு சித்திரைத் திங்கள் திருவோண நட்சத்திர நாளில் ஜீவசமாதி எனும் நிஷ்டையில் கூட விரும்புகின்றோம். அதற்குத் தக்க இடம் அமைத்து தருக’ என்று கேட்டுக்கொண்டார்.

சித்தரின் கோரிக்கையை கேட்ட மன்னன், ‘இன்னும் பலகாலம் தாங்கள் இப்புவியில் வாழவேண்டும்’ என வேண்டி நின்றான். ஆனால், சிற்றம்பல நாடிகள், தமது முடிவில் தீர்க்கமாக இருந்தார். இதனால் சோழமன்னன் மறுப்பு ஏதும் கூறாமல், சிற்றம்பல நாடிகளின் விருப்பப்படியே நடந்தான்.

சித்தர் தன் சீடர்களுடன் சமாதி அடைவதற்காக, மயிலாடுதுறைக்கு மேற்கே உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கினான். பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான்.  அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது.  

இந்த அதிசயத்தைக் காண அன்பர்கள் பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார். அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது  சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர்.  

சீடர் கண்ணப்பர்

அப்போது வடக்கு நோக்கிச் சென்ற கண்ணப்பர் என்ற சீடர், இந்தச் செய்தி அறிந்து அங்கு ஓடோடி வந்தார். சமாதிகள் அனைத்தையும் வணங்கினார். முடிவில், தனது குருநாதர் சிற்றம்பல நாடிகள் சமாதி முன்பு  வணங்கி,     

‘ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்கா
மீண்டும் எழுந்தருள வேண்டாவோ– நீண்டவனும்
ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்
பூரணமா வையாத போது’ 


– என்று மனமுருகிப் பாடினார்.

அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரைத் தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார் சிற்றம்பல நாடிகள். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. 

இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள்வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகின்றார்.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய எளிய நுழைவாசலைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், கருவறைக்குள் தலத்தின் நாயகரான சீகாழி சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியும், அதன்மீது  சிவலிங்கத் திருமேனியும்  ஒளி வீசும் பொலிவோடு நமக்குக் காட்சி தருகிறது. அவரை வணங்கும் போது இனம் புரியாத பரவசம் நம்மைப் பற்றுகின்றது.  இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள்,  நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. 

கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாக்கள் 

ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.  

அமைவிடம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும்,  சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.
–பனையபுரம் அதியமான்.

சாத்திர  நூல்

றையருளைப் பேசும் நூல்கள் தோத்திரம், சாத்திரம் என இரண்டு வகைப்படும். தோத்திரங்கள் பக்தியையும், சாத்திரங்கள்  தத்துவ ஞானத்தையும் விளக்குகின்றன. சமயாச் சாரியர் காலத்தில் தோத்திரங்கள் மிகுந்திருந்தன. சந்தான ஆசாரியார்கள் காலத்தில் சாத்திரங்கள் மிகுந்து, தத்துவ ஞானத்தை வளர்த்தன. இதில் சாத்திரங்கள் வழிவந்த சந்தான ஆசாரியார்களுள்  முதல்வராக விளங்கியவர் மெய்கண்டதேவர் ஆவார். இவருக்குப் பின் உமாபதி தேவர் மூலமாக, பல்வேறு சீடர்களால் தத்துவ ஞானம் வளர்ந்தது. இந்த மரபில் தோன்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் இயற்றிய நூல்களுள் ‘துகளறு போதம்’ என்ற சாத்திர நூல் இன்றும் தலைசிறந்து விளங்குகிறது. சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள்   உண்மைநெறி விளக்கத்தினை நீக்கி, துகளறு போதத்தைக் கொள்ளல் வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.

இதே போல் சிற்றம்பல நாடிகள் அருளிய பல்வேறு நூல்களுள் சிறப்புடைய தோத்திர நூலாக விளங்குவது, 'திருச்செந்தூர் அகவல்' ஆகும். இது  சாத்திரம் நிறைந்த தோத்திர நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆசிரியரின் அனுபவ நூலாக இருப்பதால், அன்பர்களுக்கு சிறந்த பாராயண நூலாகவும் அமைந்துள்ளது. இது தவிர, முக்காலத்திரங்கல், அனுபூதி விளக்கம், தாலாட்டு, கலித்துறை முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். திருச்செந்தூர் அகவல், இவரை முருகனின் அடியவர்களில் ஒருவராக இடம் பெற வைத்துள்ளது.

அய்யன் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் ஜீவ நாடி வாக்கு

"நாடி" என்னும் நாமம் உடைய சித்தன் அங்கு அடங்கி இருப்பது உண்மை.குருவாரம் முழு மதி தினங்களில் அங்கு வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.பித்த நிலை(பைத்தியம்) மனிதர்களுக்கு பித்தம் தெளியும்.

நன்றி
http://www.dailythanthi.com/

No comments:

Post a Comment